அசாமில் முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்துகளுக்குப் புதிய சட்ட மசோதா

2 mins read
a12c0059-5ed8-4048-b43b-7ee70a9e478f
அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா புதிய சட்ட மசோதாவைப் பற்றிக் கூறினார். - கோப்புப் படம்: தி ஹிந்து / இந்திய ஊடகம்

கெளஹாத்தி: இந்தியாவின் அசாம் மாநிலத்தில், இஸ்லாமிய சமயத்தினர் திருணம் அல்லது விவாகாரத்து செய்துகொள்ளும்போது அந்நிகழ்வைப் பதிவுசெய்துகொள்வதைக் கட்டாயப்படுத்தும் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதா, குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவின் மத்திய அரசாங்கம் எல்லாத் தரப்பு மக்களுக்குமான சிவில் சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அசாமில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மாநில அளவில் அதற்கு இணங்கும் வகையில் எடுக்கப்படும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

எல்லா மக்களுமான சிவில் சட்டத்துக்கான திட்டத்துக்கு இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சட்டம் தங்களின் சமய நம்பிக்கைக்கு எதிரானது என்பது அவர்களின் வாதம்.

இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் அனைவரும் அந்நாட்டின் பொதுவான குற்றவியல் சட்டத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். எனினும், திருணம், விவாகரத்து, குடும்பச் சொத்தை கைமாற்றுவது போன்றவற்றுக்கான விதிமுறைகள் பல்வேறு சமூக, சமயத்தினரின் கலாசாரத்துக்கேற்ப நடப்பில் உள்ளன.

அசாமில், மற்ற சமயத்தைச் சேர்ந்தவர்கள் திருமணங்களை சிவில் அதிகாரிகளிடம் பதிவுசெய்துகொள்வது ஏற்கெனவே கட்டாயமாக இருந்து வருகிறது. அந்த மாநிலத்தை ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி, அடுத்த சட்டசபை அமர்வில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தது.

“குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதே எங்களின் அடிப்படை எண்ணம்,” என்று அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் திருமணம், விவாகரத்தைப் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்குவது சமயம் சார்ந்த சடங்குகளுக்கு இடையூறாக இருக்காது என்று திரு சர்மா கூறினார்.

குறிப்புச் சொற்கள்