இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஜோயாலுக்காஸ் நகைக்கடை குழுமத்தின் உரிமையாளர் ஜோயாலுக்காஸ் வர்கீஸின் ரூ.305 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட அக்குழுமத்தின் பல இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத் துறை விடுத்துள்ள அறிக்கையில், "திருச்சூரில் உள்ள ஷோபா நகரில் நிலம் மற்றும் குடியிருப்புக் கட்டடம் கொண்ட 33 அசையா சொத்துகள் (ரூ.81.54 கோடி) ஆகும்.
மேலும், மூன்று வங்கிக் கணக்குகள் (ரூ.91.22 லட்சம் வைப்புத்தொகை), ரூ.5.58 கோடி மதிப்புள்ள மூன்று நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் ஜோயாலுக்காஸ் இந்தியப் பங்குகள் (மதிப்பு ரூ.217.81 கோடி) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டப் பிரிவு 37A-ன்கீழ் இணைக்கப்பட்ட இந்தச் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.305.84 கோடி ஆகும்," என்று கூறியது.
மேலும், ஃபெடரல் புலனாய்வு முகமையின்படி, "இந்தியாவில் இருந்து ஹவாலா மூலம் துபாய்க்கு அதிக அளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் ஜோயாலுக்காஸ் வர்கீஸுக்குச் சொந்தமான நிறுவனமான துபாயில் உள்ள ஜோயாலுக்காஸ் ஜூவல்லரியில் முதலீடு செய்யப்பட்டது," எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின்போது சேகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ ஆவணங்களும் அஞ்சல்களும், ஹவாலா பரிவர்த்தனைகளில் ஜோயாலுக்காஸின் தீவிர ஈடுபாட்டைத் தெளிவாக நிரூபித்துள்ளன என்று கூறப்படுகிறது.
துபாயில் உள்ள ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சியில் முதலீடு செய்யப்பட்ட நிதியின் உரிமையாளர் வர்கீஸ் என்றும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

