பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த உதவியாளர்: அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த உதவியாளர்: அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

படம்: பிக்சாபே

26 Apr 2026 - 11:50 am

2 mins read

நர்மதாபுரம்: மத்தியப் பிரதேச மாநிலம், நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நேரத்தில் பெண் நோயாளி ஒருவருக்கு மருத்துவமனை உதவியாளர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிப்பரியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, சிங்கம்னா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மார்பகத்தில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக வந்திருந்தார்.

அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சௌம்யா ரகுவன்ஷி மருத்துவமனையில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சையின் போது உதவி செய்யும் பர்சதி லால் மஞ்சி என்பவர், மருத்துவர் இல்லாதது பற்றி எதுவும் கூறாமல் அந்தப் பெண்ணுக்குத் தானே அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார்.

முறையான மருத்துவத் தகுதி இல்லாத ஒருவர் அறுவை சிகிச்சை செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இது குறித்து வட்டார மருத்துவ அதிகாரியிடம் உடனடியாகப் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் மாவட்ட மருத்துவ அதிகாரி நர்சிங் கெஹ்லோட்டின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அவர் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார்.

முதற்கட்ட விசாரணையில் உதவியாளர் தன்னிச்சையாகச் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பர்சதி லால் மஞ்சியைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட மருத்துவ அதிகாரி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து உயர்மட்ட அதிகாரிகளுக்கோ அல்லது வட்டார மருத்துவ அதிகாரிக்கோ தகவல் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு, நிர்வாகக் குளறுபடிகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்