தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித் ஆகியோரைத் தொடர்ந்து டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார்

டெல்லி முதல்வராகிறார் அதிஷி

3 mins read
232396ee-34d3-4d73-a30a-476b639f240a
டெல்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி பதவியேற்கிறார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி பதவியேற்கிறார். டெல்லியின் எட்டாவது முதலமைச்சர் ஆகிறார் அதிஷி.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக் கூட்டத்தில் 43 வயது அமைச்சர் அதிஷி மர்லேனா டெல்லியின் அடுத்த முதல்வராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் பதவிக்கு அதிஷி பெயரை கெஜ்ரிவால் முன்மொழிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி துணை ஆளுநர் வி.கே. சக்சேனாவை இன்று மதியம் 4.30 மணியளவில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை வழங்க உள்ளார். தொடர்ந்து அதிஷி முதல்வர் பொறுப்பை ஏற்பார்.

திருவாட்டி அதிஷி கட்சியிலும் அரசாங்கத்திலும் முக்கிய முகமாக உள்ளார். கல்வி, உயர்கல்வி, நிதி, பொதுப்பணித் துறை, திட்டமிடல், நீர், மின்சாரம், சேவைகள், மக்கள் தொடர்பு உள்ளிட்ட 13 அமைச்சுகளுக்குத் தலைமை தாங்குகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் சிறையில் இருந்தபோது, ​​கட்சி நிகழ்வுகள், ஊடகக் கூட்டங்களில் கட்சியின் நிலைப்பாட்டை அதிஷி எடுத்துக்கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி விமர்சகராக அவர் உருவெடுத்தார். டெல்லி தண்ணீர் நெருக்கடியின்போது ஆம் ஆத்மி அரசாங்கத்தை அவர் பாதுகாத்தார்.

​​டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்களான விஜய் குமார் சிங், ட்ரிப்தா வாஹி ஆகியோருக்குப் 1981 ஜூன் 8 ஆம் தேதி டெல்லியில் பிறந்தார் அதிஷி. டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றத் துறையில் இளநிலைப் பட்டமும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலைப் பட்டங்களும் பெற்றவர். ரோட்ஸ் கல்விமானும் அன அதிஷி, டெல்லி பள்ளிகளில் கல்வியை மாற்றியமைப்பதில் சிசோடியாவின் ஆலோசகராக முக்கியப் பங்காற்றியவர்.

2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார் அதிஷி, 2015 முதல் 2018 வரை மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக இருந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு டெல்லியின் பொறுப்பாளராக இருந்தவர்.

கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் வெற்றிபெற்ற இவர், தற்போது கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா சிறைக்கு சென்றபிறகு, 2023ல் அமைச்சர் பொறுப்பேற்றார்.

டெல்லி சட்டமன்றத்துக்கு 2025 தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவரை டெல்லியின் முதல்வராக அதிஷி இருப்பார் என்று கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச கிராமத்தில் ஏழு ஆண்டுகள் இயற்கை விவசாயம், கல்வி சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்.ஆம் ஆத்மியின் கொள்கைகளை வடிவமைப்பதில் அதிஷி முக்கியப் பங்காற்றியுள்ளார் கல்வியின் மீதான அவரது கவனம், பொது நலனுக்கான அர்ப்பணிப்பு அவரை இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்கவராகக் கவனம் பெறச்செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக் கூட்டத்தில் கெஜ்ரிவால், அதிஷி.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக் கூட்டத்தில் கெஜ்ரிவால், அதிஷி. - படம்: இந்திய ஊடகம்

மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது. எனினும் அவர் முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது, எந்த கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

திகாா் சிறையிலிருந்து வெளியே வந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளாருமான கெஜ்ரிவால், 48 மணி நேரத்திற்குள் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. ஆனால் மக்களின் தீர்ப்பை தெரிந்துகொள்ளாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்