சென்னை: திரைப்பட இயக்குநர் அட்லி, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் இணைப்பில் உருவாகிவரும் ‘ராக்கா’ திரைப்படம் உலகச் சாதனையைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அதிநவீன ‘மோஷன்-கேப்சர்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 37 கலைஞர்களின் உடலசைவுகள், முகபாவனைகளை நிகழ்நேரத்தில் பதிவு செய்ததற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
வழக்கமாகச் சிலரை மட்டுமே கொண்டு படமாக்கப்படும் இத்தொழில்நுட்பத்தில், ஒரே நேரத்தில் 37 பேரைப் பதிவு செய்து உலகத் திரைப்பட உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியவர்கள்.
இதற்கான அதிகாரபூர்வ கின்னஸ் உலகச் சாதனைச் சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லி இருவரும் முறைப்படி பெற்றுக்கொண்டனர்.
தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இச்செய்தியைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
தீபிகா படுகோன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு தவிர்த்து ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளில் வெளியாக உள்ளது.
