ஹைதராபாத்: கர்நாடகாவில் துப்பாக்கிச் சூடு நடத்தி, தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) கொள்ளை அடித்துச் சென்ற திருடர்கள் ஹைதராபாத்தில் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர்.
காவல்துறையினரிடமிருந்து அவர்கள் நூலிழையில் தப்பியோடியதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, ஜனவரி 16ஆம் தேதி காலையில், கர்நாடகா மாநிலம் பீதரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வங்கியைச் சேர்ந்த காவலர்கள் சென்றிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், பணம் கொண்டுசென்றவர்களைத் தடுத்து நிறுத்தி, துப்பாக்கியால் சுட்டு ரூ.93 லட்சத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச்சென்றனர்.
அந்தக் கொள்ளையர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு, ஹைதராபாத்தில் உள்ள அப்சல் கன்ஸ் பகுதிக்குச் சென்றதாகவும் அங்கிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் செல்வதற்காகத் தனியார் பேருந்தில் முன்பதிவு செய்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இரவு 7 மணிக்குப் பேருந்து கிளம்பவிருந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு, பயண முகவர் நிறுவனத்தின் ஊழியர்கள் பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டனர்.
அவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பீதரைச் சேர்ந்த காவல்துறையினர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக ராய்ப்பூர் செல்லவேண்டி அந்தப் பேருந்தின் பின்னிருக்கைகளில் அமர்ந்திருந்தனர். தாங்கள் காவல்துறையினர் என்றும் தங்கள் பைகளைச் சோதனை செய்யவேண்டாம் என்றும் அவர்கள் கூறினர்.
அதேநேரத்தில் உதவி நடத்துநர் ஜகாங்கீரிடம் வங்கிக் கொள்ளையர்கள் தங்கள் பைகளைச் சோதனை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அதற்காக 50,000 ரூபாயைக் கொடுத்தனர். இதனால் சந்தேகமடைந்த ஜகாங்கீர் உடனடியாகக் கீழே இறங்கும்படி அவர்களிடம் கூறினார்.
காவல்துறையினர் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்ட கொள்ளையர்கள் தங்களைப் பிடிப்பதற்காகவே அவர்கள் கண்காணிப்பதாக நினைத்து, உடனடியாகக் கீழே இறங்கி, ஜகாங்கீரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.
தொடர்புடைய செய்திகள்
படுகாயமடைந்த ஜகாங்கீர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தக் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக ஹைதராபாத் காவல்துறை நான்கு தனிப்படைகளை அமைத்துள்ளதாகக் கூறியுள்ளது.