தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏடிஎம் கொள்ளை: நால்வருக்கு 24 ஆண்டு சிறை

1 mins read
0f5cc6c1-a688-4cdb-98af-8effb7f409f6
இந்தக் கும்பல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தன் கைவரிசையைக் காட்டியுள்ளது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

திருச்செங்கோடு: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வழியாகச் சென்ற ஒரு கொள்கலன் லாரியை மடக்கிப் பிடிக்குமாறு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட காவல்துறையினர் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனைக் கேட்டுக்கொண்டனர். அந்த லாரியில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் மையக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட தனிப்படையினர் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர்.

லாரியில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் தப்பிச் செல்ல முயன்றதுடன், காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஆகிய இருவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து, ஆய்வாளர் தவமணி தாக்குதல் நடத்திய இருவரையும் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடிபட்ட மற்ற ஐவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் இருந்து கொள்கலன் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 68 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தக் கும்பல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தன் கைவரிசையைக் காட்டியுள்ளது.

இந்த வழக்கு திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நீதிபதி மாலதி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) தீர்ப்பு வழங்கினார்.

இதில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு 24 ஆண்டுகளும் மற்றொருவருக்கு 12 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்