ஓமான் அருகே வணிகக் கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம்

ஓமான் அருகே வணிகக் கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம்

கோப்புப் படம்: ஏஎஃப்பி

07 Oct 2026 - 4:22 pm

2 mins read

புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஓமான் நாட்டின் கடல் எல்லை அருகே பனாமா நாட்டுக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், 11 இந்தியர்கள் உட்பட 12 கடலோடிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான ‘எம்டி ஆன் பீஸ்’ (MT On Peace) என்ற வணிகக் கப்பலில் மொத்தம் 19 பணியாளர்கள் இருந்தனர். அதில் 17 பேர் இந்தியர்கள் ஆவர். தாக்குதலில் காயமடைந்த 12 பேரில் 11 பேர் இந்தியர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஓமான் அதிகாரிகளின் விரைவான உதவியுடன் காயமடைந்த கடலோடிகள் அனைவரும் மீட்கப்பட்டு, ஓமானில் உள்ள கசாப் நகரில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை, அனைத்துலகக் கடல் வழிகளில் வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் பெரும் கவலையளிக்கிறது என்றும் வட்டார அமைதி, நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

மேலும், மீட்புப் பணிகளுக்கு உடனடியாக உதவி வழங்கிய ஓமான் அரசுக்கு இந்தியா தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டது.

ரஷ்ய எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

இதனிடையே, கருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ரஷ்ய எண்ணெய்க்கப்பல் மீது ஆளில்லா வானூர்தி மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அதில் இருந்த 23 இந்திய ஊழியர்களும் காயமின்றிப் மீட்கப்பட்டுள்ளனர்.

லைபீரியக் கொடியுடன் சென்று கொண்டிருந்த ‘அஃப்ராமேக்ஸ் ரியோ’ (Aframax Rio) என்ற கச்சா எண்ணெய்க்கப்பல், சோச்சி நகருக்கு அருகே வந்தபோது கடல்சார் ‘டிரோன்’ தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் கப்பலில் திடீரெனப் பெருந்தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், கப்பலில் இருந்த 23 இந்தியர்களையும் உடனடியாகப் பாதுகாப்பாக மீட்டனர்.

இத்தாக்குதலுக்கு உக்ரேன் காரணமாக இருக்கலாம் எனக் சந்தேகிக்கப்பட்டாலும், அதிகாரபூர்வமாக இதுவரை எவ்வித உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்