புதுடெல்லி: புதுடெல்லி முதல்வர் வீட்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது அடையாளம் தெரியாத நபரால் முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டார்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் குப்தாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கியதாகச் சொல்லப்பட்டது.
இச்சம்பவத்தில் காயமடைந்த டெல்லி முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
‘‘மக்களாட்சியில் அரசியல் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், வன்முறைக்கு இடம் கிடையாது. புதுடெல்லி முதல்வரைத் தாக்கியவர்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், “இதுபோன்ற சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களின் பாதுகாப்பில் உள்ள யதார்த்தத்தை இது அம்பலப்படுத்துகிறது. புதுடெல்லி முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் ஒரு சாதாரண மனிதனோ அல்லது ஒரு சாதாரண பெண்ணோ எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?,” என அவர் கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில், புதுடெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவருக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
குஜராத்தைச் சேர்ந்தவர் 41 வயதான ராஜேஷ் கிம்ஜி. நாய்கள்மீது மிகவும் பிரியம் கொண்ட அவர், அண்மையில் புதுடெல்லியிலும் சுற்றியுள்ள புறநகர்களிலும் திரியும் தெருநாய்களை 8 வாரங்களுக்குள் பிடித்து நிரந்தரமாகப் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் புதுடெல்லி முதல்வர் வரவேற்பு தெரிவித்திருந்தார். இதனால், அவர்மீது கடும் அதிருப்தியில் இருந்த ராஜேஷ் அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நாய்கள் மீதான அன்பினால் தன் மகன் இவ்வாறு செய்துவிட்டதாகவும் முதல்வரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் ராஜேஷின் தாயார் கூறினார்.