புதுடெல்லி: கனடாவில் இந்துக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டொரோன்டோ அருகே பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) வன்முறையில் ஈடுபட்ட செயல் ஏற்கத்தக்கதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமயம் சார்ந்த பழக்கவழக்கங்களை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செய்வதற்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் திரு ட்ரூடோ தமது கண்டனச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வன்செயல் தொடர்பாக காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. வன்முறையாளர்கள் வாயிற்கதவைத் தாண்டி கோவிலுக்குள் சென்று பக்தர்களைத் தாக்குவது அந்தக் காணொளியில் பதிவாகி இருந்தது.
சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது அந்தக் கோவிலில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவிலுக்குள் நுழைந்து பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பீல் வட்டார காவல்துறை பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும் அந்தக் கோவிலுக்குள் ஆடவர்கள் சிலர் தடியுடன் நுழைந்ததையும் காணொளியில் காணமுடிந்ததாக ஏஎஃப்பி கூறியது.
கனடிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரா ஆர்யாவும் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் இடமாக கனடா மாறிவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
“சமய சுதந்திரம் கனடாவின் அடிப்படைப் பண்பு. ஒவ்வொருவரும் அவரவர் வழிபாட்டுத்தலத்தில் பாதுகாப்பை உணர வேண்டும்,” என்றும் அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“இந்துக் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற வழக்கமான நிகழ்வுகளுக்கு கனடா அரசு முன்னேற்பாடாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்,” என்று தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
கனடாவில் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனக் குரல்கள் பெருகி வருகின்றன.