பொகோடா: இந்திய ஜனநாயகம் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கொலம்பியா சென்றுள்ள அவர், அங்குள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார்.
அப்போது, இந்தியா பல்வேறு சவால்களில் இருந்து வெளியே வர வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். அதேநேரத்தில் சீனாவை விட முற்றிலும் மாறான அமைப்பு இந்தியாவில் உள்ளது. சீனா மையப்படுத்தப்பட்ட அமைப்பைக் கொண்டதாகவும் இந்தியாவோ பரவலாக்கப்பட்ட அமைப்பைக் கொண்டதாகவும் உள்ளன.
“பல மொழிகள், கலாசாரங்கள், மரபுகள், மதங்களைக் கொண்ட அமைப்பாக இந்தியா உள்ளது. பல வகையான பாரம்பரியம், மதம், கொள்கைகளுக்கு உரிய இடம் தேவை. அதை உருவாக்கும் சிறந்த முறையைக் கொண்ட அமைப்பே ஜனநாயக அமைப்பு. ஆனால், இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது,” என்றார் ராகுல்.
மக்களை அடக்கும் சர்வாதிகார அமைப்பைச் சீனா நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சீனாவைப் போல் இந்தியா செயல்படாது என்றும் அங்குள்ள அமைப்பை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்தார்.
“சீனாவுக்கு அண்டை நாடாகவும் அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடாகவும் இந்தியா இருக்கிறது. பெரிய சக்திகள் மோதிக்கொள்ளும் இடத்திற்கு நடுவில் நாம் இருக்கிறோம்.
“பொருளியல் ரீதியில் நாம் வளர்ந்தாலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“அமெரிக்காவில் உற்பத்தித் துறையில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். ஜனநாயகமற்ற சூழலில் சீனா தனது உற்பத்தித் திறனை நிரூபித்துள்ளது. ஆனால், நமக்கு ஒரு ஜனநாயக அமைப்பு தேவை,” என்று ராகுல் கூறினார்.
சீனாவுடன் போட்டி போடக்கூடிய ஜனநாயக அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அதுவே இந்தியா எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சவால் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.