இந்தியக் கொடிதாங்கிய கப்பல்மீது தாக்குதல்; வெளியுறவு அமைச்சு கண்டனம்

இந்தியக் கொடிதாங்கிய கப்பல்மீது தாக்குதல்; வெளியுறவு அமைச்சு கண்டனம்

1 mins read
bd7cd2e5-d50c-4d88-ae12-881e65040389
ஓமான் கடலோரப் பகுதியில் தாக்குதலுக்குள்ளான கப்பலின் இந்திய ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஓமான் கடலோரப் பகுதியில் இந்தியக் கொடிதாங்கிய கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாது’ எனக் குறிப்பிட்ட அமைச்சு, அப்பகுதியில் வணிகக் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பலின் இந்திய ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிய அமைச்சு, அவர்களை மீட்க உதவிய ஓமானிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டது.

அந்தக் கப்பல்மீது புதன்கிழமை (மே 13) தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்கள், ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பகுதியில் தொடரும் இடையூறுகளுக்கு இடையே இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கான திரவ எரிவாயுக் கப்பல்கள் பல ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துசென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியக் கொடிதாங்கிய மேலும் 13 கப்பல்கள் அவ்வழித்தடத்தைக் கடந்துசெல்வதற்காகத் தற்போது பாரசீக வளைகுடாப் பகுதியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே, வணிகக் கப்பல்கள்மீதான தாக்குதல்களுக்கும் கடல்வழி வணிகத் தடங்களில் தொடரும் இடையூறுகளுக்கும் எதிரான தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் மறுவுறுதிப்படுத்தியுள்ளது.

“வணிகக் கப்பல்கள், அவற்றின் அப்பாவி ஊழியர்கள் குறிவைக்கப்படுவதும் கடல்வழிப் பயணம், வணிகத்திற்குக் குறுக்கீடு செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும்,” என்று வெளியுறவு அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்