புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) தெலுங்கு மொழித் துறைத் தலைவர் பதவிக்கான மோதலில் பேராசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துறையில் நான்கு பேராசிரியர்கள் பணியாற்றினர். அவர்களில் இருவர் பணி ஓய்வு பெற்றதால் ஏனைய இரு பேராசிரியர்களில் ஒருவர், மூன்று ஆண்டுகளுக்குத் துறைத் தலைவராகத் தொடர்ந்துள்ளார்.
தற்போதைய தலைவர் பேராசிரியர் சி.எஸ். ராமச்சந்திர மூர்த்தி விடுப்பில் சென்றதால் சக பேராசிரியர் பி.வெங்கடேஸ்வரலு துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், கடந்த ஜுலை 28ஆம் தேதி பிஎச்யூ வளாகத்தில் பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ராமச்சந்திர மூர்த்தி. அப்போது அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கைகள் மற்றும் ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தாக்குதல் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வாராணசி மாநகரக் காவல்துறை துணை ஆணையர் டி. சரவணன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இதில், சக பேராசிரியர் வெங்கடேஸ்வரலுவின் உத்தரவின்படி அவரது முன்னாள் மாணவர்கள் இருவர் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
உள்ளூர் ரவுடிகள் நால்வருக்கு அந்த மாணவர்கள் பணம் கொடுத்ததும் அம்பலமானது. இதையடுத்து, முன்னாள் மாணவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் வெங்கடேஸ்வரலு, முன்னாள் மாணவர் காசிம் பாபு உட்பட நான்கு பேர் தலைமறைவாகிவிட்டனர்.