புதுடெல்லி: ஓமானுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் பெரும்பாலும் இந்திய ஊழியர்கள் இருந்த கப்பல்கள் தாக்கப்பட்டது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவை தொலைபேசிவழி அழைத்திருக்கிறார்.
அந்தத் தாக்குதல்களில் இந்தியர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள மூத்த அமெரிக்கத் தூதர் ஒருவருக்கு இரண்டு நாள்களில் இருமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரு ஜெய்சங்கர், திரு ரூபியோவை அழைத்துள்ளார்.
திரு ரூபியோவுடன் தாம் பேசியதாக அவர், சனிக்கிழமை (ஜூன் 13) எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
“வளைகுடா பகுதியில் மூன்று இந்தியக் கடல்துறை ஊழியர்களைப் பலிவாங்கிய அமெரிக்கக் கடற்படைத் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதை நான் வலியுறுத்தினேன். வர்த்தகக் கப்பல்கள்மீது அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பலாவ் நாட்டுக் கொடியைக் கொண்ட எம்டி செட்டெபெல்லோ எனும் கப்பல்மீது கடந்த புதன்கிழமை (ஜூன் 10) அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதலில் இந்திய கடல்துறை ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு ஜூன் எட்டாம் தேதி பலாவ் கொடியைக் கொண்ட எம்டி மரிவேக்ஸ் எனும் மற்றொரு கப்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதிலிருந்த 24 இந்திய ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) கினி-பிசாவ் கொடி பறக்கும் கப்பலும் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளானது. அக்கப்பலில் இருந்த 20 இந்திய கடல்துறை ஊழியர்கள் மீட்கப்பட்டதாகப் புதுடெல்லி தெரிவித்தது.
இச்செயல்கள் குறித்து இந்தியாவுக்கான மூத்த அமெரிக்கத் தூதர் ஜேசன் மீக்சுக்கு புதுடெல்லி இருமுறை அழைப்பு விடுத்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இரு அமைச்சர்களுக்கு இடையிலான உரையாடல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சு உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், இந்த விவகாரம் தொடர்பில் தாங்கள் இந்திய அரசாங்கத்துடன் நேரடித் தொடர்பில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.

