சண்டிகர்: கோவிலில் கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இருவர் கைதாகினர்.
இருவருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசர்ஸ் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் சில நாள்களுக்கு முன் அடையாளம் தெரியாத இருவர், இருசக்கர வாகனத்தில் வந்து கையெறி குண்டுகளை வீசினர்.
அச்சமயம் கோவிலுக்குள் பக்தர்கள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கோவிலில் இருந்த அர்ச்சகரும்கூட காயமின்றி உயிர் தப்பினார்.
இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதனிடையே, மே 22ஆம் தேதியன்று பயங்கரவாதிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இருவரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் எனத் தெரியவந்துள்ளது.
இருவரில் தலைமறைவாக இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி பகவந்த் சிங் அமிர்தசரஸில் உள்ள அகல்கர் கிராமத்தில் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே ஒருவர் கைதாகி உள்ளார்.
கோவில் தாக்குதல் வழக்கில் இதுவரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர்.