இந்தியக் கடலோடிகளுடன் சென்ற இரு சரக்குக் கப்பல்கள்மீது தாக்குதல்

இந்தியக் கடலோடிகளுடன் சென்ற இரு சரக்குக் கப்பல்கள்மீது தாக்குதல்

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

17 Oct 2026 - 12:18 pm

1 mins read

புதுடெல்லி: இவ்வாரத் தொடக்கத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில், மொத்தம் 24 இந்தியக் கடலோடிகளுடன் சென்ற இரு சரக்குக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.

இருப்பினும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்தியக் கப்பல்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்தார்.

அன்றைய நாளில் 15 இந்தியக் கடலோடிகளுடன் ‘எம்டி எஸ்டி 3’ என்ற கப்பல் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றபோது தாக்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஒன்பது இந்தியக் கடலோடிகளை ஏற்றிச் சென்ற ‘யாரா ஜே’ எனும் வேதிப்பொருள் கப்பல், அக்டோபர் 14ஆம் தேதி ருமேனியாவில் உள்ள சுலினா பகுதியில் ஆளில்லா வானூர்தித் தாக்குதலுக்கு உள்ளானதாக அமைச்சர் கூறினார்.

இவ்விரு சம்பவங்களிலும் எவ்வித உயிருடற்சேதமும் ஏற்படவில்லை என்று ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவு வழியாகத் திரு சோனோவால் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கம் இரு சூழ்நிலைகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் ஊழியர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்ய கப்பல் மேலாண்மை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் அண்மைக்காலமாகப் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரான் - ஓமான் இடையே அமைந்துள்ள அந்தக் குறுகிய கடல்பகுதியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

அதேபோல, ரஷ்யா - உக்ரேன் போர் காரணமாகக் கருங்கடல் பகுதியிலும் வணிகக் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்துள்ளதை ருமேனியா சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகப்பல்தாக்குதல்ஹோர்முஸ்