கொல்லம்: போலியான வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் போல ஆள்மாறாட்டம் செய்து, அதிகாரிகளிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இணைய மோசடிப் பேர்வழியைக் கண்டுபிடிக்க காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் கொல்லம் ஊரகக் காவல்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் பலருக்கு, +977 என்ற அனைத்துலக எண்ணில் தொடங்கும் தொடர்பு எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்தப் போலிக் கணக்கு மாவட்டக் காவல்துறைத் தலைவர் விசு பிரதீப்பின் படத்தைத் தாங்கியிருந்தது. உடனடியாக ரூ.40,000 அனுப்பி வைக்கும்படி தமது குறுஞ்செய்தியில் அந்த மோசடிப் பேர்வழி குறிப்பிட்டிருந்தார்.
ஆயினும், இதுபோன்ற மோசடிகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நடப்பதை அறிந்திருந்த அதிகாரிகள், சந்தேகமடைந்து அதுபற்றி உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் விளைவாக, ஒருவரும் பணத்தைப் பறிகொடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, இவ்விவகாரம் சமூக ஊடகக் கண்காணிப்புப் பிரிவிற்குக் கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் இணையக் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
டெல்லி சோன்கேட் பகுதியிலுள்ள ஒரு வங்கியில் வைத்துள்ள கணக்கிற்குப் பணத்தை அனுப்பிவைக்கும்படி அந்த மோசடிப் பேர்வழி கேட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்தக் கணக்கிற்கு உரியவர்க்கும் மற்ற இணையமோசடி வழக்குகளுக்கும் தொடர்புள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

