நியூயார்க்: காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, அமெரிக்க நீதிமன்றத்தில் தன்னுடைய குற்றத்தை பிப்ரவரி 13ஆம் தேதி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பன்னூன், அமெரிக்கா, கனடா குடியுரிமை பெற்றவர்.
அவரை அமெரிக்காவில் கொலை செய்ய சதி நடந்ததாகவும் அதில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருந்ததாகவும் அமெரிக்கத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அது தொடா்பாக இந்தியரான 54 வயது நிகில் குப்தா கைது செய்யப்பட்டார்.
அவ்வழக்குத் தொடர்பில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தன்னுடைய குற்றத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தவலை நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் உறுதிசெய்திருக்கிறது.
பிப்ரவரி 13ஆம் தேதி, மன்ஹாட்டன் மத்திய நீதிமன்றத்தில் முன்னிலையான நிகில், கடந்த 2023ஆம் ஆண்டு பன்னூனைக் கொலை செய்ய, கொலையாளி எனத் தான் கருதிய நபருக்கு 15,000 அமெரிக்க டாலர் கொடுத்ததை ஒப்புக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசு சார்பில், பன்னூன் கொலைக்காகப் பணியமர்த்தப்பட்டவர்தான் நிகில் குப்தா என்று அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், இந்திய அரசின் கொள்கைகளுக்கு அது முரணானது என அந்நாடு தமது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கொலை செய்ய பணம் கொடுத்தல், கொலை செய்ய சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நிகில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மே 29ஆம் தேதி, அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

