புதுடெல்லி: அதிக வீரியம் கொண்ட 12 கோடி எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளைக் கடத்தும் கும்பலை இந்தியாவின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு முறியடித்துள்ளது.
‘டிரமடால் ஹைட்ரோகுளோரைடு’ எனப்படும் அந்த மாத்திரைகளின் எடை 30 டன் என்று தெரிவித்த நிதி அமைச்சு, அவையனைத்தும் டெல்லியில் உள்ள ஒரு சரக்குக் கிடங்கில் கைப்பற்றப்பட்டதாகக் கூறியது.
அவற்றின் கள்ளச்சந்தை மதிப்பு ரூ1,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
போதை மாத்திரைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் கொச்சி நகருக்கு அருகிலுள்ள இடப்பள்ளி என்னும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) அவ்விருவரும் அதிகாரிகளிடம் சிக்கினர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உமேஷ் குமார், மலப்புரத்தைச் சேர்ந்த ஃபிர்தௌஸ் ஆகியோர் அந்த இருவர்.
இதற்கிடையே, மற்றொரு சந்தேக நபர் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘ஆபரேஷன் வஜ்ரா’ என்ற பெயரில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஜூலை 10 முதல் ஜூலை 20 வரை முக்கிய நகரங்களில் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் பிடிபட்டன.
தலைநகர் டெல்லி, பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றதாக நிதி அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
போதை மாத்திரைகளை உள்ளடக்கிய சரக்குப் பெட்டிகளைச் சட்டவிரோதமாக அனைத்துலகக் கடல் வழியில் நுழைந்து லிபியாவுக்குத் திசைதிருப்ப கும்பல் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
‘டிரமடால்’ என்பது மிதமான மற்றும் கடுமையான வலிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரை. மருத்துவரின் பரிந்துரைப்படியே அவை வழங்கப்படும்.
உலகில் மோதல் நடக்கும் பகுதிகளிலுள்ள போராளிகளிடையே வலி, சோர்வு, அச்சத்தைப் போக்குவதற்காக அதிக வீரியம் கொண்ட டிரமடால் சட்டவிரோதமாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ‘போராளி மருந்து’ (ஃபைட்டர் டிரக்) என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.

