பெண் அமைச்சர்மீது தாக்குதல் முயற்சி; மாணவர் இயக்கத் தலைவர் வீட்டின்மீது வெடிகுண்டு வீச்சு

பெண் அமைச்சர்மீது தாக்குதல் முயற்சி; மாணவர் இயக்கத் தலைவர் வீட்டின்மீது வெடிகுண்டு வீச்சு

2 mins read
db7008ac-37cb-4168-9a14-a6ad3c83f154
கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. - படம்: பிடிஐ

கோழிக்கோடு: இந்தியாவின் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக, கோழிக்கோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கேரள மாணவர் ஒன்றிய (KSU) மாவட்டச் செயலாளர் பிதுல் பாலன் வீட்டின்மீது வெடிகுண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மர்ம மனிதர்கள் வீசிய வெடிகுண்டு வெடித்ததில், வீட்டின் சன்னல் கண்ணாடிகளும் முன்பகுதியும் சேதமடைந்தன. நல்ல வேளையாக வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பதாக காங்கிரஸ் மற்றும் கேஎஸ்யூ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

முன்னதாக, வியாழக்கிழமை (பிப்ரவரி 26) கண்ணூர் ரயில் நிலையத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்திய கேஎஸ்யூ தொண்டர்கள், அமைச்சரைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் அமைச்சருக்குக் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதாகக் கூறி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவத்தில் பிதுல் பாலன் உள்ளிட்ட கேஎஸ்யூ நிர்வாகிகள் ஐந்து பேர்மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சருக்கு எதிரான தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையிலேயே பிதுல் பாலனின் வீடு குறிவைக்கப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் 36 வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் வீணா ஜார்ஜ், சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை காலை திருவனந்தபுரம் திரும்பினார்.

உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி மாநிலம் முழுவதும் வன்முறையைத் தூண்டுவதாக காங்கிரஸ் தலைவர்கள் சாடியுள்ள நிலையில், அமைச்சரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினர் முக்கியப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்