கோல்கத்தா: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய அதிகாரிகள் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை நிராகரிக்க வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான திருவாட்டி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அதை முன்னிட்டு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கும்படி தமது கட்சி வேட்பாளர்களுக்குத் திருவாட்டி மம்தா எச்சரிக்கை விடுத்தார்.
மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள நானூர் என்ற பகுதியில் திருவாட்டி மம்தா தேர்தல் பிரசாரம் செய்தார்.
அதில், அரசியல் லாபத்துக்காக மத்திய அரசாங்க அமைப்புகளைப் பாரதிய ஜனதா கட்சி தவறாகப் பயன்படுத்துவதாகத் திருவாட்டி மம்தா சாடினார்.
“அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. இப்போது புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உங்கள் (வேட்பாளர்கள்) வேட்புமனுக்களை நிராகரிக்கலாம். எனவே கவனமாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுங்கள்,” என்று திருவாட்டி மம்தா பிரசாரத்தில் கூறினார்.
முதலமைச்சர் மம்தா, மக்கள் அனைவரும் குறிப்பாகப் பெண்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான கட்சி என்றும் அவர்களின் பெயர்கள் வாக்களிப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 23ஆம் தேதியும் 29ஆம் தேதியும் இரண்டு கட்டமாக மேற்கு வங்காளத்தில் வாக்களிப்பு நடைபெறும். மே 4ஆம் தேதி வாக்குகள் அங்கு எண்ணப்படும்.

