விசா வழங்குவதில் ஆஸ்திரேலியா கெடுபிடி; இந்திய மாணவர்கள் பாதிப்பு

விசா வழங்குவதில் ஆஸ்திரேலியா கெடுபிடி; இந்திய மாணவர்கள் பாதிப்பு

2 mins read
40 விழுக்காட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை
321fd30f-b651-4e15-b39e-2a6de12b9560
தெற்காசிய நாட்டு மாணவர்களின் விண்ணப்ப விசாக்களே அதிக அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.  - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: ஆஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் விசா அனுமதிகளில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது

இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து அனைத்துலக மாணவர்களுக்கான விசாக்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிராகரித்து வருகிறது ஆஸ்திரேலியா.

இதனால் இந்தியா, நேப்பாளம், பங்ளாதே‌‌ஷைச் சேர்ந்த மாணவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2025ஆம் ஆண்டு விசா அனுமதிகளுடன் ஒப்பிடுகையில், இது மிகப் பெரிய வீழ்ச்சியாகும்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அனைத்துலகப் பல்கலைக்கழக மாணவர்களின் விசா விண்ணப்ப நிராகரிப்பு விகிதம் 32.5 விழுக்காட்டை எட்டியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மாதத்தில் பதிவான ஆக அதிக நிராகரிப்பு விகிதம் இதுவாகும். 2025ஆம் ஆண்டின் அதிகபட்ச நிராகரிப்பு விகிதம் 15.5 விழுக்காடு ஆகும்.

தெற்காசிய நாட்டு மாணவர்களின் விசா விண்ணப்பங்களே அதிக அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

‘த நோட்டிசர்’ அறிக்கையின்படி, இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களில் 40 விழுக்காடு மறுக்கப்பட்டுள்ளன.

60.2 விழுக்காடு நேப்பாள நாட்டவரின் விசாக்களும், 47.2 விழுக்காட்டு பங்ளாதே‌ஷியர் விசாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சீன மாணவர்களின் நிராகரிப்பு விகிதம் 3 விழுக்காடாக உள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 34,000 மாணவர் விசாக்களை மட்டுமே ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று காலத்தை தவிர்த்துப் பார்த்தால், 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவேயாகும்.

அண்மையில், ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சு எளிமையாக்கப்பட்ட மாணவர் விசா கட்டமைப்பின்கீழ் இந்திய மாணவர்களுக்கான விசா விதிகளைச் சத்தமின்றிக் கடுமையாக்கியுள்ளது.

இந்தியர்கள் சான்றுநிலை இரண்டிலிருந்து சான்றுநிலை மூன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதாவது, இந்திய விண்ணப்பதாரர்கள் தங்களின் முதன்மையான நோக்கம் படிப்புதான் என்பதை நிரூபிக்க, இன்னும் விரிவான நிதி ஆவணங்களையும் இதர சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் குடியேறிகளை அனுப்பும் நாடாக இந்தியா உள்ளது என உள்விவகாரத் துறை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்தியாவிற்கு அடுத்தபடியாகச் சீனா, பிலிப்பீன்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நேப்பாளம் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்