புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏர்டிரங்க் நிறுவனம், இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.
அது, ஆசியா, பசிபிக் வட்டாரத்தில் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனம் ஆகும்.
பங்ளாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த ராபின் குதா 2015ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஏர்டிரங்க் நிறுவனத்தைத் தொடங்கினார்.
இப்போது இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உட்பட பல்வேறு நாடுகளில் அந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன.
இந்தியாவில் மும்பை, சென்னை, ஹைதராபாத் நகரங்களில் ஏர்டிரங்க் நிறுவனத்தின் மிகப்பெரிய தரவு நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்த நிறுவனத் தலைவர் ராபின் குதா டெல்லியில், சனிக்கிழமை (ஜூன் 6) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடியை ஏர்டிரங்க் முதலீடு செய்யும் என்று அறிவித்தார்.
இதுகுறித்துப் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஏர்டிரங்க் நிறுவனத்தின் முதலீடு இந்தியாவின் மின்னியல் உள்கட்டமைப்பில் மிகப்பெரியது. மேகக் கணிமை மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகின் நடுவமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.
“ஏர்டிரங்க் நிறுவன முதலீட்டால் இந்தத் துறையில் இந்தியா மேலும் வேகமாக முன்னேறிச் செல்லும். நாட்டில் வேலைவாய்ப்புகள் கணிசமாகப் பெருகும்,” என்று கூறியுள்ளார்.

