மும்பை: மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதந்தோறும் 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியதால் அவரது வருமானம் தற்பொழுது கேள்விக்குறியாகி உள்ளது.
அமெரிக்க தூதரகத்திற்கு எந்த ஒரு பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது என்பதால் அங்கு சென்ற ரகுல் ரூபானி தன்னுடைய பொருள்களை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டு, திரும்ப வந்து அவற்றை வாங்கிச் சென்றார். அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் ரூ.1,000 வாங்கினார்.
இதுபோல் அவர் அங்கு வருபவர்களின் உடைமைகளை பாதுகாத்துக் கொடுத்து ஒவ்வொருவரிடமும் ரூ.1,000 பெற்று, வண்டி ஓட்டாமலேயே மாதம் ரூ.5 முதல் 8 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்ற செய்தியை ரகுல் ரூபானி ஊடகத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்தச் செய்தியை பலரும் பகிர்ந்து வந்தனர். ஆனால், சமூக ஊடகங்களில் கிடைத்த புகழ் இவரது தொழிலுக்கே பிரச்சினையாக்கி விட்டது.
மும்பை காவல்துறையினர் அந்த ஆட்டோ ஓட்டுநர் மீது தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே உடைமைகளைப் பாதுகாக்கும் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி அவரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
“பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே எந்த வாகனங்களையும் நிறுத்துவதற்கு அனுமதி அளிப்பது கிடையாது.
“ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளைக் கொண்டுவந்து விட்டு, மீண்டும் அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்லும் நோக்கத்திற்காக மட்டுமே இந்தப் பகுதியில் அனுமதிக்கப்படுகிறார்கள் எனக் காவல்துறையினர் விளக்கம் தந்துள்ளனர். ஆனால், இந்த ஆட்டோ ஓட்டுநர் அனுமதியை மீறி இந்த வேலையைச் செய்து வந்திருக்கிறார்,” என்று கூறினர் காவல் அதிகாரிகள்.
மேலும், ஆட்டோ ஓட்டுநரை விசாரணைக்கு வரும்படியும் மும்பை காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பி உள்ளனர்.

