அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12ஆம் தேதி லண்டன் கிளம்பிய ஏஐ-171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
அந்த கொடூரமான விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேரும் உடல் கருகி பலியாகினர். அதில் ஒருவர் மட்டும், அவசர வழியில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில், அந்த விமான விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மகள் பாயல் காத்திக்கும் சென்றார். அவருடைய கனவை நோக்கிய அந்தப் பயணம் பெருந்துயரத்தில் முடிந்தது.
குஜராத்தின் ஹிமாத்நகரைச் சேர்ந்த இளம்பெண் பாயல் காத்திக். இவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் (எம்டெக்) படிப்பதற்காக லண்டன் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார்.
அவரது தந்தை சரக்கு ஏற்றும் ஆட்டோ ஓட்டுகிறார். மேலும் உயிரிழந்த மாணவி தான் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி என உறவினர்கள் கூறினர்.
இது குறித்து பாயல் காதிக்கின் தந்தை கூறுகையில், “ஜூலை 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு, பாயலுக்கு பிரியாவிடை அளித்துவிட்டு இன்பக் கனவுகளுடன் வீடு திரும்பினோம். ஆனால், சில நிமிடங்களுக்குள் விமானம் விபத்துக்குள்ளானது என்ற செய்தி வந்தது.
விபத்தில் ஒரு பயணியைத் தவிர அனைவரும் உயிரிழந்ததாகத் தகவல் தெரியவந்தது. எனது மகளுடைய மரணம் டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
“பாயல் லண்டனில் படிக்க விரும்பினாள். அதனால் அவளுடைய கல்விக்கு உதவ நாங்கள் கடன் வாங்கி அவளை அங்கு அனுப்பினோம்,” என்று தந்தை சுரேஷ் காத்திக் கண்ணீர்மல்கக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மகள் காத்திக் லண்டனில் படித்து முடித்துவிட்டு நல்ல வேளையில் அமர்ந்து இந்தக் கடன்களை எல்லாம் கட்டி முடித்து, நல்ல நிலைக்கு வருவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர். இப்போது அவர்கள், மகளை இழந்து தவிப்பதோடு, அவரது படிப்புக்கு வாங்கிய கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்று தவிக்கின்றனர்.
“குடும்பத்திலேயே முதன்முதலாக பாயல்தான் வெளிநாடு செல்ல இருந்தார். அவர் உதய்ப்பூரில் பிடெக் முடித்துவிட்டு, எம்டெக் படிப்பதற்காகவே லண்டன் புறப்பட்டார். ஆனால், கொஞ்சமும் எதிர்பாரா வகையில் இந்தக் கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. இது எங்கள் குடும்பத்தினரையும் இப்பகுதி மக்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது,” என்று பாயலின் உறவினர் பாரத் சவுகான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த சுசிலா பதக் என்பவர் கூறுகையில், பாயல் எல்லாராலும் விரும்பப்படும் ஒரு நல்ல பெண். அவர் என் மகனுக்குத் துணைப்பாட வகுப்புகளை எடுத்து வந்தார். அவரை நான் கடைசியாகச் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும்.
இந்த விபத்தில் அவர் உயிரிழந்தது எங்களுக்கு பெருந்துயரைத் தந்துள்ளது என்று கூறினார். பாயலின் இழப்பால் ஹிமாத்நகர் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.