தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

7 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஊதியம் ரூ.4,500 அதிகரிப்பு

1 mins read
7f3d17b1-6c64-4b98-873b-39804e13adc0
இந்தியாவில் வேலையின்மை விகிதமானது வெகுவாகக் குறைந்துள்ளது என்பதும் மேற்குறிப்பிட்ட அறிக்கை வழி தெரிய வந்துள்ளது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி மாதச் சம்பளம் 4,500 ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளதாக இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 17 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிரந்தர ஊதியம் பெறுவோரின் சராசரி மாத வருமானம் 2017ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ரூ.16,538ஆக இருந்தது. அது 2024‍ல் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரூ.21,103ஆக அதிகரித்துள்ளது. அதாவது, மாத ஊதியம் 4,565 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதேபோல், மற்ற ஊழியர்களின் அன்றாடக் கூலி, இதே காலகட்டத்தில் ரூ.294இல் இருந்து ரூ.433ஆக உயர்ந்துள்ளது என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதனிடையே, இந்தியாவில் வேலையின்மை விகிதமானது வெகுவாகக் குறைந்துள்ளது என்பதும் மேற்குறிப்பிட்ட அறிக்கை வழி தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 6.6%ஆக இருந்த நகர்ப்புற ஆண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம், தற்போது 5.9% ஆகக் குறைந்துள்ளது. இதேபோல் கிராமப்புற ஆண்களின் வேலையின்மை விகிதம் 4.5% ஆகக் குறைந்துள்ளது.

இது கடந்த நான்கு மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவு என்று வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்