புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு தொழிலாளியும் வாரந்தோறும் சராசரியாக 46.7 மணி நேரம் வேலை செய்வதாக அண்மைய புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் பொருளியல் ரீதியில் முதல் பத்து இடங்களைப் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில், தொழிலாளர்களின் சராசரி உழைப்பு நேரத்தைப் பொறுத்தவரை இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.
46.1 மணி நேரத்துடன் சீனா இரண்டாவது இடத்திலும், பிரேசில் 39, அமெரிக்கா 38, ஜப்பான் 36.6 மணி நேரத்துடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
அண்மையில் எல்.என்.டி நிறுவனத்தின் தலைவரான எஸ்.என். சுப்பிரமணியன் உலக அளவில் இந்தியா முதலிடத்துக்கு வரவேண்டுமானால் ஊழியர்கள் அனைவரும் வாரந்தோறும் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமென்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
எல்.என்.டி தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்ததாலே சுப்பிரமணியத்தின் ஆண்டு ஊதியம் ரூ.51 கோடியாக உள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 43 விழுக்காடு அதிகமாகும்.
இந்நிலையில், தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமென அவர் கூறுவதாக பலரும் விமர்சித்திருந்தனர்.
சீன மக்கள் வாரந்தோறும் 90 மணி நேரமும், அமெரிக்கர்கள் 50 மணி நேரமும் வேலை பார்ப்பதாக சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியர்களை வேலை பார்க்க வைக்க முடியும் என்றால் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

