புதுடெல்லி: ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், இபோலா கிருமிப் பரவலாகப் பரவி வருகிறது.
இபோலா நோய் தாக்கம் குறித்து முறையாகக் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டினால் உயிர் இழப்புகளும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு இபோலா பரவாமல் தடுப்பதற்காக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இதற்கிடையே ஆப்பிரிக்கப் பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் மருத்துவமனைகளைத் தயார்நிலையில் வைத்திருக்குமாறும் விரைவு மீட்பு அமைப்புகளை வலுப்படுத்துமாறும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ், இபோலா நோய்க்கான அறிகுறிகளைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, அண்மையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்தவர்களிடையே இந்தக் கண்காணிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், சோர்வு, தசை வலி, தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோல் தடிப்பு மற்றும் சிவந்த கண்கள் போன்ற அறிகுறிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என அரசு பட்டியலிட்டுள்ளது.
இபோலா கிருமியால் ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

