புதுடெல்லி: ஈரான் முழுவதும், குறிப்பாக அதன் தெற்கு கடற்கரைப் பகுதியில் நிலையற்ற சூழ்நிலை, ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைவதால் ஈரானுக்கான தங்களது பயணத் திட்டங்களை ரத்து செய்யுமாறும், ஏற்கெனவே அங்கு இருந்தால் வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் இந்தியா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
டெஹ்ரானில் இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட பயண ஆலோசனையில், அண்மைய நாள்களாக ஈரானில் நிலையற்ற சூழ்நிலையும் மோதல்களும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஈரானுக்கு எந்தவொரு காரணத்திற்காகவும் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், பாதுகாப்புச் சூழல் மேம்படும் வரை அந்தப் பயணத்தை தற்போது ஒத்திவைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அந்நாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்கள், கிடைக்கக்கூடிய விமானங்களைப் பயன்படுத்தி தற்காலிகமாக வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்பவர்கள், அதிபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தற்போதைய நிலவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளச் செய்திகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறும், குறிப்பாக ஈரானின் தெற்கு கடற்கரையோரம் அதிக ராணுவ நடமாட்டம் உள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியக் குடிமக்கள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், புதிய தகவல்களுக்குத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டது.
மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆலோசனையை இந்தியா வழங்கியுள்ளது.
அண்மையில் அமெரிக்கா ஈரானுக்குள் இருக்கும் பாலங்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், மின்சார வசதிகள்மீது தாக்குதல் நடத்தியது.
அதே நேரத்தில் டெஹ்ரான் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான மோதலால் போர் மூளக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
முந்தைய காலகட்டங்களிலும் இந்தியா இது போன்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளது. தற்போதைய இந்த அறிவிப்பும் அதே பாணியைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறும் இந்தியா வலியுறுத்துகிறது.
ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யாத இந்தியக் குடிமக்கள் உடனடியாகப் பதிவு செய்யுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உதவி தேவைப்படுவோருக்கான எண்களையும் அது பகிர்ந்துள்ளது.

