உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலைச் சுற்றியுள்ள சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அசைவ உணவுப் பொருட்களை விநியோகம் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள சில உணவகங்கள், தங்கும் விடுதிகள் அங்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு அசைவ உணவு, மதுபானங்களை வழங்குவதாகத் தொடர்ச்சியாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து அயோத்தி நிர்வாகம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக ‘பஞ்ச்கோசி பரிக்ரமா’ எனும் புனித நடைப்பயணத்திற்காகக் குறிப்பிடப்பட்ட பகுதிகளில், இணையவாசல் மூலம் அசைவ உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது; எனவே, இதனை முற்றிலும் தடை செய்யக்கோரி தொடர் கோரிக்கைள் விடுக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது, அயோத்தி மற்றும் ஃபைசாபாத்தை இணைக்கும் 15 கிலோமீட்டர் நீளமுள்ள ராம் பாதையில் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
அப்பகுதியில் மதுபானம் தடைசெய்வது குறித்து அயோத்தி நகர் மாநகராட்சி 2025 மே மாதம் முடிவெடுத்தது என்பது நினைவுகூரத்தக்கது.
எனினும் அந்த முடிவு எட்டப்பட்டப் பிறகும், கடந்த ஒன்பது மாதங்களில் மதுபான விற்பனைக்கான தடை பெரிய அளவில் அயோத்தியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேலும், தற்போது வந்துள்ள தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலும் அந்தப் பாதையில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகளில் மதுபானம் விற்கப்பட்டு வந்ததாகவும், இதனால் உள்ளூர்வாசிகள், பக்தர்கள், பயணிகள் உள்பட பலர் அதிருப்தி அடைந்ததாகவும் தெரிவித்த அயோத்தி மாநகராட்சி, இந்தப் பிரச்சினையை முற்றுப்பெறச் செய்வதற்காகவே கோயிலின் 15 கிமீ சுற்றளவில் இணையம்வழி அசைவ உணவு விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விளக்கியுள்ளது.
மேலும் இந்தப் புதிய ஆணை குறித்து, அவ்வட்டாரத்தில் இயங்கிவரும் அனைத்து உணவகங்கள், கடைக்காரர்கள், விநியோக நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்வாகம் குறிப்பிட்டது.

