அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடிப் புகார்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடிப் புகார்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

1 mins read
73937ab3-8f22-488e-b2e7-1edd2ae4c704
மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி இரு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.  - கோப்புப் படம்: விக்கிபீடியா
Google News Preferred Icon

லக்னோ: அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையைக் கணக்கிடுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் அம்மாநில அரசுக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி அஜய் குமார், தினேஷ் குமார் யாதவ் ஆகிய இரு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

உண்டியல் காணிக்கை மோசடி குறித்தும், நன்கொடையாக அளிக்கப்பட்ட தங்கம் மாயமானது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இருவரும் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியன்று முறைப்படி திறக்கப்பட்டது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர். கோவில் உண்டியலில் ஏராளமானோர் காணிக்கை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், உண்டியலில் ரொக்கமாகவும் பொருள்களாகவும் செலுத்தப்படும் காணிக்கைகளை எண்ணி, மதிப்பிடும் பணிக்குத் தனியார் நிறுவன ஊழியர்களை நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏறக்குறைய ரூ.200 கோடிக்கு முறைகேடு நடந்திருக்கக்கூடும் எனக் கருதப்படும் நிலையில், இதுகுறித்து விசாரிக்க சிறப்புப்படை அமைக்க வேண்டும் என்று இரு வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்