புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்றுக் கொண்டார்.
அவரது பதவியேற்பு விழா நேற்று (மே 14) நடைபெற்றது.
இவரது பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் முடிவடையும் என்பதால், ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார்.
1960, நவம்பர் 24ஆம் தேதி, மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் பிறந்த கவாய், வலுவான பொதுச்சேவை பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரது தந்தை, மறைந்த ஆர்.எஸ்.கவாய், பீகார், கேரள மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றியவர்.
1985ஆம் ஆண்டு சட்டப் பணியைத் தொடங்கிய நீதிபதி கவாய், அரசியலமைப்பு, நிர்வாகச் சட்டங்களில் தனிக்கவனம் செலுத்தினார்.
1992ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் 2000ல் அரசு வழக்கறிஞராகப் பதவி உயர்வு பெற்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆவதற்கு முன்பு, பல்வேறு முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார் திரு.கவாய்.
தொடர்புடைய செய்திகள்
அரசியலமைப்பின் 370 சட்டப் பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த அமர்வில் நீதிபதி பூஷண் கவாயும் இடம்பெற்றிருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை, அம்மாநில அரசு இடிப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில அரசை கடுமையாக விமர்சித்தவர் திரு.கவாய்.
மேலும், காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் ஆறு பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த அமர்விலும் இவர் இடம்பெற்றிருந்தார்.