பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் இருவர் தடுப்புக் காவலில்

1 mins read
3420f05d-b7b3-4eae-91a4-f66290a2c797
கொலை செய்யப்பட்ட பாபா சித்திக். - கோப்புப் படம்: இணையம்

மும்பை: இந்தியாவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் கொலை வழக்கில் மேலும் இரு சந்தேக நபர்கள் காவல்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

மும்பை நகர நீதிமன்றம் ஒன்று ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 17) அவ்வாறு உத்தரவிட்டது. அதன்படி அவ்விருவரும் வரும் வியாழக்கிழமை (நவம்பர் 21) வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர்.

அந்த சந்தேக நபர்கள் இருவரும் சல்மான் வோரா, ஆகா‌ஷ்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். திரு பாபா சித்திக்கை கொலை செய்ததில் அவர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

திரு சித்திக்கை கொலை செய்ய சல்மான் வோரா நிதி வழங்கியதாக நம்பப்படுகிறது. சிங், கொலை தொடர்பில் வேறொருவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வோரா, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார். பஞ்சாப் மாநில எல்லையிலிருந்து சிங் அழைத்து வரப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் கூறினார்.

முன்னதாக இம்மாதம் 12ஆம் தேதியன்று நீதிமன்றம், இவ்வழக்கில் கொலையாளி என்று நம்பப்படும் ‌ஷிவ குமாரையும் மேலும் நால்வரையும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்