தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை விமானத்தில் பஹல்காம் பயங்கரவாதிகள்: பாதுகாப்புப் படை சோதனை

2 mins read
e8beff65-fc29-4b96-a425-c66b7a307585
இலங்கை விமானத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் பாதுகாப்புப் படை சோதனை நடத்தியிருக்கிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஆறு பேர், இலங்கைக்கு விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து வந்த தகவலையடுத்து, இலங்கையின் பண்டாரநாயகே விமான நிலையத்தில் சென்னையிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பயங்கரவாதிகளும் சென்னையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்குத் தப்பியிருக்கலாம் என்று இந்திய புலனாய்வுப் பிரிவு அளித்த தகவலையடுத்து சனிக்கிழமை, ஸ்ரீலங்கன் விமான நிலையத்தில் சிறப்புச் சோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்தார்.

“இந்தியாவின் தரப்பிலிருந்து ஆறு பயங்கரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.

“இதையடுத்து சென்னையிலிருந்து வந்த விமானம், பண்டாரநாயகே விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தேடுதல் பணி நடத்தப்பட்டது.

“சென்னையிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல்122 எண் விமானம் சென்னையிலிருந்து சனிக்கிழமை முற்பகல் 11.59 மணிக்குப் புறப்பட்டு கொழும்பு சென்றதும், பாதுகாப்புப் படை அதிகாரிகளால் முழுவதுமாகச் சோதனையிடப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

“இந்த சிறப்புச் சோதனையானது, இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் விமானத்தில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சென்னை கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலின்படி, உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த விமானம் அடுத்து சிங்கப்பூர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

“எங்களது பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதனை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்