தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: எல்லை மூடல்; பாகிஸ்தானியர் வெளியேற உத்தரவு

2 mins read
eac46de8-7cb1-4501-8d94-2640689112a5
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்முவில் புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) போராட்டம் நடந்தது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இரு நாட்டு எல்லையில் அதிகளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடெல்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதைப் பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே 1960ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பது, பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை மூடுவது, சார்க் விசா விலக்கு திட்டத்தின்கீழ் பாகிஸ்தான் நாட்டவர் இந்தியாவிற்குள் நுழையும் அனுமதியை ரத்து செய்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தான் நாட்டவர் அடுத்த 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறவும், புதுடெல்லி, பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“தீவிரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள்மீது விரைவில் வலுவான பதிலடி கொடுக்கப்படும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு மட்டும் அல்ல, இந்தச் சதித்திட்டத்துக்கு காரணமானவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார்.

பாதுகாப்புப் படை தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

குல்காமில் ராணுவம் - பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

பாராமுல்லாவில் புதன்கிழமை (ஏப்ரல் 23) தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. உரி நலா என்ற இடத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள்மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டன.

அங்குத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்நிலையில் காஷ்மீரின் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, ராணுவம் அங்கு விரைந்தது.

இதற்கிடையே, உதம்பூர் அருகே பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்