ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து ஷோயப் அக்தரின் ஒளிவழி உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் தளங்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஒளிவழிகள் தவறான தகவல்கள், பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகளை பரப்புவதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து 16 பாகிஸ்தானிய யூடியூப் ஒளிவழிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள 16 யூடியூப் ஒளிவழிகளில் ஏறக்குறைய 63 மில்லியன் பின்தொடர்பவர்கள் (சப்ஸ்கிரைபர்கள்) உள்ளனர்.
டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், சுனோ நியூஸ், ஜியோ நியூஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் ஊடக நிறுவனங்களின் 16 யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் இர்ஷாத் பட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் பாரூக் உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் யூடியூப் ஒளிவழிகளும், பாகிஸ்தான் ரெஃபரென்ஸ், சாமா ஸ்போர்ட்ஸ், உசைர் கிரிக்கெட், ராஸி நாமா உள்ளிட்ட ஒளிவழிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளத்தில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எல்லையில் 4வது நாளாக அத்துமீறல்
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயாராகி வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் நிலையில், இந்திய விமானப்படை விமானங்களும் கடற்படை கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டன.
இதனிடையே, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. இதே நடவடிக்கையை பாகிஸ்தானும் எடுத்துள்ள நிலையில், எல்லைப்பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இவ்வேளையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி- ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை
டெல்லியில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். எல்லையில் நிலவும் சூழல் குறித்தும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
பஹல்காம் தாக்குதலையடுத்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தக்க பாடம் புகட்டப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.