சாமராஜநகர்: வாடிக்கையாளர் கேட்ட தின்பண்டங்களை எடுத்துக்கொண்டிருந்தபோதே பேக்கரி ஊழியர் ஒருவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலம், சாமராஜநகரில் உள்ள கேக் வோர்ல்டு பேக்கரியில் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 12) நிகழ்ந்தது.
வேணுகோபால், 56, என்ற அந்த ஊழியர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் கடந்த ஐந்தாண்டுகளாக அந்த பேக்கரியில் அவர் வேலை செய்துவந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ நாளன்று இரவு 7.30 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நேர்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் தொடர்பில் சாமராஜநகர் காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இன்னொரு சம்பவத்தில், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த பரினீத்தா ஜெயின் என்ற 23 வயதுப் பெண் கடந்த சனிக்கிழமை தம்முடைய உறவினரின் திருமண நிகழ்வில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அண்மையில்தான் அவர் தமது எம்பிஏ படிப்பை முடித்திருந்தார். முன்னதாக, அவரது இளைய சகோதரரும் 12 வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாறு நடனமாடும்போது அல்லது விளையாடும்போது இளையர் பலர் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்த தகவல்களும் காணொளிகளும் இணையத்தில் பரவலாகின்றன.
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிறகே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், அத்தகைய உயிரிழப்புகளுக்கும் கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் தொடர்புள்ளதா என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால், அதனை ஏற்க மறுத்துள்ள மருத்துவர்கள், குடும்ப வரலாறு, வாழ்க்கைமுறை போன்றவற்றுக்கும் இதய நலத்திற்கும் முக்கியத் தொடர்பிருப்பதாகக் கூறுகின்றனர்.

