தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகாவில் ‘பைக் டாக்சி’ சேவைகளுக்குத் தடை

2 mins read
71c3c944-5aad-426d-a134-e1ccf8452507
கர்நாடகாவில் ‘மோட்டார் சைக்கிள் டாக்சி’ சேவைகளுக்கு அந்த மாநிலத்தின் போக்குவரத்துத் துறை விதித்த தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஊபர், ஓலா, ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் ‘பைக் டாக்சி’ சேவை வழங்கி வருகின்றன.

கர்நாடகப் போக்குவரத்துத் துறை இது போன்ற சேவைகளுக்குத் தடை விதித்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கர்நாடகா போக்குவரத்துத்துறை தடைவிதித்திருப்பது செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டது. ஞாயிற்றுக்கிழமை 15ஆம் தேதிக்குப் பிறகு கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைகளுக்கு அனுமதி இல்லை என்று உயர் நீதிமன்றம் முன்னதாகக் கூறியிருந்தது.

இந்நிலையில் 13.6.2026 ஆம் தேதி தலைமை நீதிபதி காமேஸ்வரராவ், நீதிபதி ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், “நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ‘பைக் டாக்சி’ சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகத்தில் மட்டும் அதற்கு விதிமுறைகளை அரசு வகுக்கவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள், பெரிய வாகனங்களைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது.

“இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடும் குறைவாக இருக்கும். அதனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்தால் போதும். பதிவெண் பலகைகளின் நிறத்தை பசுமை நிறத்திற்கு மாற்றினால் போதுமானது,” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும் கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்