தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உத்தரப் பிரதேசத்தில் சாதிப் பெயர், பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை

2 mins read
372b5c39-7d4b-494d-b7f1-18d3b9644215
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். - படம்: ஊடகம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை ஆவணங்களில் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதி ரீதியான அடையாளங்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது அமைதி, தேசிய ஒற்றுமைக்கு இவை அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக முதல்வர் யோகி ஆதித்ய நாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வரிசையில், சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து கலெக்டர்கள், செயலர்கள், காவல் துறை தலைவர்கள் ஆகியோருக்கு தலைமைச் செயலாளர் தீபக் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 10 முக்கியமான அம்சங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வாகனங்களில் சாதிப் பெயர்கள், வாசகங்கள் அல்லது ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால், 1988 மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் இருந்து இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் வந்துள்ளது. அதேநேரத்தில் அங்குள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், “5,000 வருடங்களாக மனதில் வேரூன்றியுள்ள சாதியப் பாகுபாட்டை எப்படி நீக்க முடியும். இப்போதும் ஒருவரைச் சந்தித்தால் அவரின் பெயரைக் கேட்பதற்கு முன்பு சாதியைக் கேட்கிறார்கள். அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணிகளில் உள்ள பாகுபாட்டை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும். சாதி ரீதியாக அவதூறு பரப்புவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் சாதியை நீக்கும் முறை தமிழ்நாட்டில்தான் நடப்பில் இருக்கிறது. பெரியார், திராடக் கட்சிகளில் தொடர் போராட்டம், முன்னெடுப்பால் தமிழ் நாட்டில் அரசு ஆவணங்களில் சாதி நீக்கப்பட்டது. தற்போது உத்தரப் பிரதேசத்திலும் இது நடப்புக்கு வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்