புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, எதிர்வரும் 2028ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான புதிய மசோதா வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அங்கு நீடித்துவரும் காற்று மாசுபாட்டுக்கு இருசக்கர வாகனங்கள் வெளியிடும் புகையே முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, மின்சாரம் இல்லா வாகனங்கள் வெளியிடும் புகையே குளிர்காலத்தில் காற்று மாசு ஏற்பட 23 விழுக்காடு காரணம் என அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் மொத்தமுள்ள வாகனங்களில் சுமார் 67 விழுக்காடு இருசக்கர வாகனங்கள் என்பதால், வாகனப் புகை வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கு அவற்றை விரைவாக மின்மயமாக்குவது இன்றியமையாதது என்று அரசு வெளியிட்ட கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றான டெல்லியில், காற்று மாசுபாடு காரணமாக சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். ஏராளமானோர் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
எனவே, புதிய கட்டுப்பாடுகள் தேவை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘டெல்லி மின்சார வாகனக் கொள்கை 2026-2030’ வரைவு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற, கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த 30 நாள்களுக்கு மக்களிடம் கருத்துகள் பெறப்படும் என்றும் அதன் பிறகு இறுதிக் கொள்கை அறிவிக்கப்பட்டு 2030ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் டெல்லி அரசு கூறியுள்ளது.
புதிய கொள்கையின்படி, எதிர்வரும் 2028 ஏப்ரல் 1 முதல் புதிய பெட்ரோல் இருசக்கர வாகனங்கள் பதிவுசெய்யப்பட மாட்டாது. இனி மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவுசெய்யப்படும். 2027ஆம் ஆண்டு முதல் மின்சார ஆட்டோக்கள் மட்டுமே புதிதாகப் பதிவுசெய்யப்படும்.
அரசுத் துறைகளில் படிப்படியாக மின்சார வாகனங்களின் பயன்பாடு மட்டுமே ஊக்குவிக்கப்படும். மேலும், மின்சார வாகனங்களை வாங்க பல்வேறு சலுகைகள், மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

