புதுடெல்லி: ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை நிறுத்துமாறு கப்பல் நிறுவனங்களுக்கும் ஆட்சேர்ப்பு முகமைகளுக்கும் இந்தியா உத்தரவிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த உத்தரவு வரும்வரை அந்த நீரிணை வழியாகப் பயணம் மேற்கொள்ளும் கப்பல்களில் இந்திய மாலுமிகள் எவரையும் பணியமர்த்தக் கூடாது என்று இந்தியக் கப்பல் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஜூலை 15) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக வணிகக் கப்பல்கள் எதிர்கொள்ளும் அபாயங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும் அது குறிப்பிட்டது.
மேலும், பாரசீக வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் கப்பல்களின் தலைவர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், உடனடி உதவி தேவைப்படும் கப்பல் பணியாளர்கள், கப்பல்கள், கப்பல் போக்குவரத்து ஆணையத்தின் தகவல் தொடர்பு நிலையம் அல்லது இந்தியப் பெருங்கடல் வட்டாரத்திற்கான இந்தியக் கடற்படை தகவல் ஒருங்கிணைப்பு மையத்தை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், அண்மை நாள்களாக ஹோர்முஸ் நீரிணையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கப்பல்கள்மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய மாலுமியும் உயிரிழந்தார்.
வணிகக் கப்பல்கள் செல்வதற்கு முக்கியமான பாதையாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது. இருப்பினும், தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதால் இது மிகவும் ஆபத்தான பாதை என அனைத்துலகக் கடல்சார் அமைப்பு எச்சரித்துள்ளது.
தரவுகள்படி வணிகக் கப்பல்களில் 310,000க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் உள்ளனர். இதன் மூலம் உலகளவில் அதிக மாலுமிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. முதலிடத்தில் பிலிப்பீன்ஸ் உள்ளது.

