சென்னை: சம வேலைக்குச் சம ஊதியம் கோரிப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினால், அவர்களைத் தன்னிச்சையாகப் பணியில் சேர்க்கக் கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 26வது நாளாகப் போராடிய ஆசிரியர்களைக் காவல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மண்டபங்களில் அடைத்தனர். அங்குத் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர். இதேபோலப் பணி நிரந்தரம் கோரிப் பகுதி நேர ஆசிரியர்களும் 13வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு மீண்டும் திரும்பி வரும்போது, அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அனுமதியைப் பெற்ற பின்னரே பணியில் சேர வேண்டும்.
தன்னிச்சையாக வட்டாரக் கல்வி அலுவலரோ, பள்ளித் தலைமை ஆசிரியரோ சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைப் பணியில் சேர அனுமதிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.
தவறினால் வட்டாரக் கல்வி அலுவலர், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர் மீது உரிய ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கண்டிப்பாகத் தெரிவிக்கப்படுகிறது எனக் கல்வித்துறை அந்த உத்தரவில் கூறியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை வளர்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சென்னை எழும்பூர் கன்னிமரா நூலகக் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) நடைபெற்றது.
அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும், வரவு செலவுத் திட்ட அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

