இஸ்லாமாபாத்: இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால், இரண்டு மாதகாலத்தில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய ரூ.1,240 கோடி (4.1 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாய், அதாவது S$182,246) இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அரசுத் தரப்புத் தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தானியச் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக இந்து தமிழ் திசை இணையத்தளம் கூறுகிறது.
பஹல்காம் தாக்குதலை அடுத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுமுதல் கடந்த ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இதனால் ஏற்பட்ட இழப்பு குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா. இதற்குப் பதிலடியாக, பதிவு செய்யப்பட்ட இந்திய விமானங்களும் இந்திய விமான நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் விமானங்கள் என இந்தியத் தொடர்பு கொண்ட அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்தது.
இதனால் பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து ஏறத்தாழ 20 விழுக்காடு குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
தடை நடப்புக்கு வருமுன் அன்றாடம் 100 முதல் 150 இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானிய விமானங்கள் தன் வான்வெளியில் பறக்கத் தடை விதித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே பாகிஸ்தான் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வான்வெளியைப் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் பயன்படுத்த முடியாத காரணத்தால் பயண நேர நெருக்கடி உட்பட, பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகப் பாகிஸ்தானிலிருந்து தென்கிழக்காசியாவுக்குச் செல்லும் விமானங்கள் இந்திய வான்வெளியைத் தவிர்க்க வேண்டியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவு மோசமடைந்தது.