விமான நிலையச் சுற்றளவில் லேசர், குப்பைக்குத் தடை: ரூ.1 கோடி வரை அபராதம்

விமான நிலையச் சுற்றளவில் லேசர், குப்பைக்குத் தடை: ரூ.1 கோடி வரை அபராதம்

கோப்புப் படம்: தினமணி

25 Nov 2026 - 5:30 pm

1 mins read

சென்னை: விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விமானப் போக்குவரத்துக்கான அச்சுறுத்தல்களைக் களையவும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு புதிய சட்ட விதிகளை வெளியிட்டுள்ளது.

220 அம்சங்கள் கொண்ட இந்த விதிகள், வரும் ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளன.

புதிய விதிகளின்படி, விமான நிலையங்களிலிருந்து 18 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் விமானிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் லேசர் ஒளிக்கதிர்களை வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பது கிலோ மீட்டர் தொலைவுக்குள் விமானிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் பிரகாசமான விளக்குகளை அமைக்கவும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

விமானங்கள் புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் பறவைகள் மோதும் விபத்துகளைத் தடுக்க, விமான நிலைய சுற்றுச்சுவரிலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவது, பறவைகளை ஈர்க்கும் செயல்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

விதிமீறல்களில் ஈடுபடுவோருக்குக் குற்றத்தின் தன்மைக்கேற்ப 10 நிலைகளில் தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

ஆக அதிகமாக அபராதம் விதிக்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் விமான நிலைய அதிகாரிகளுக்கும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அதிகரித்து வரும் லேசர் ஒளித் தொந்தரவுகள், பறவை மோதல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்