திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள், இலைகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று கோயில் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை மாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களைக் கொப்பரை ஊழியர்கள் சட்ட விரோதமாக சேகரிப்பதை தடுக்க சன்னிதான நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
நடைதிறக்கப்பட்டு சனிக்கிழமை வரையிலான ஒன்பது நாள்களில் 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் சபரிமலையில் வழிபாடு செய்துள்ளனர். கோயில் வருமானம் 42 கோடியையும் தாண்டியுள்ளது என்று கேரள ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது. சபரிமலையில் கைப்பேசிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கடுமையாக அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் டிசம்பர் 1 முதல் 6ஆம்் தேதி வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக சாலையோர வியாபாரிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சபரிமலையின் படிகளிலும் கோவில் வளாகத்திலும் காணொளிப் பதிவு, கைப்பேசி பயன்பாட்டுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், கோவிலுக்குள் இருந்த படங்கள் உள்ளிட்டவை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள நீதிமன்றம், இதுபோன்ற பகிர்வுகளை அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் சபரிமலையில் பணியில் இருந்த காவல்துறையினரின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
ஐயப்பன் கோவிலின் புனித 18 படிகளான ‘பதினெட்டாம் படி’யில் காவல்துறையினர் படமெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சன்னிதானத்தின் சிறப்பு அதிகாரியிடம் ஏடிஜிபி எஸ் ஸ்ரீஜித் அறிக்கை கேட்டுள்ளதாக மனோரமா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அன்றைய பணியை முடித்துக்கொண்டு, முதல் தொகுதி காவல்துறையினர் குழுவாகப் புகைப்படம் எடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்களுக்கு வழிவகுத்ததை அடுத்து, ஏடிஜிபி தலையிட்டுள்ளார்.