திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே அரசியல் பேச்சுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும் ஆன்மிகச் சூழலையும் காக்கும் வகையில் திருமலையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுகளை தடை செய்ய தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
திருமலையில், சுவாமி தரிசனத்திற்காக வரும் அரசியல் தலைவர்கள் சிலர், தரிசனம் முடிந்ததும் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
அப்போது அரசியல் பேச்சுகளையும் விமர்சனங்களையும் செய்கின்றனர். இதுபோன்ற அரசியல் பேச்சுகள், விமர்சனங்கள் திருமலையின் ஆன்மிகச்சூழலை சீர்குலைத்து வருகிறது.
இந்நிலையில் திருமலையில் அரசியல் பேச்சுகளுக்கு தடை விதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
எனவே, இதனை மனதில் வைத்து, திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்பவர்கள், திருமலையின் ஆன்மிகச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விமர்சன பேச்சுகளை பேசாமல் தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அந்த விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

