பெங்களூரு: சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை 21 வயதிற்குட்பட்டோருக்கு விற்க இந்தியாவின் கர்நாடக மாநில அரசு தடைவிதித்துள்ளது.
முன்னர் அங்கு இந்த வயது வரம்பு 18ஆக இருந்தது.
புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறுவோர்க்கான அபராதமும் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய அதிபர் திரவுபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, மத்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமான திருத்தம் வெள்ளிக்கிழமை (மே 30) முதல் நடப்பிற்கு வந்தது.
அதன்படி, கர்நாடக மாநிலத்தில் ‘ஹூக்கா’ எனப்படும் புகைக்குழாய் விடுதியைத் திறக்கவும் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கென புதிய சட்டப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விதிமீறுவோர்க்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் ரூ.50,000 முதல் ரூ.100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
அதே நேரத்தில், 30 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தங்குவிடுதிகளிலும், 30 பேருக்குமேல் அமர்ந்து உண்ணும் வசதிகொண்ட உணவகங்களிலும், விமான நிலையங்களிலும் புகைப்போருக்கென ஒரு தனியிடம் ஒதுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி உலகப் புகையிலையில்லா நாளாகக் கடைப்பிடிக்கப்படும் நிலையில், அதனை முன்னிறுத்தும் வகையில் கர்நாடகாவில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

