பள்ளிகள் அருகே 50 மீ. சுற்றளவில் விரைவு உணவுகள் விற்கத் தடை: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

பள்ளிகள் அருகே 50 மீ. சுற்றளவில் விரைவு உணவுகள் விற்கத் தடை: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

1 mins read
1efc0eda-050f-482d-b4c3-c032c194ce23
மாணவர்களின் நலன் கருதி, பள்ளி உணவகங்களிலும் 50 மீட்டர் சுற்றளவிலும் அதிகக் கொழுப்பு, சர்க்கரை, உப்பு கொண்ட உணவுப் பொருள்களை விற்க ராஜஸ்தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

ஜோத்பூர்: பள்ளிகளை ஒட்டி 50 மீட்டர் சுற்றளவில் ‘சிப்ஸ்’, குளிர்பானங்கள், விரைவு உணவுகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய ஜோத்பூர் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிபதி அனுப் குமார் தண்ட், தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளி உணவகங்களிலும் 50 மீட்டர் சுற்றளவிலும் அதிகக் கொழுப்பு, சர்க்கரை, உப்பு கொண்ட உணவுப் பொருள்களை விற்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஒவ்வொரு பள்ளியும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர் பிரதிநிதிகளைக் கொண்ட உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குழுவை நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்.

எட்டு வாரங்களுக்குள் பள்ளி உணவகங்கள் விநியோகிக்கும் உணவுப் பொருள்களின் கலோரி அளவு, மூலப்பொருள்கள், ஊட்டச்சத்தின் அளவு ஆகியவற்றைக் குறிப்பிடும் உணவுப் பட்டியல் பலகைகளைக் காட்சிப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் பாதுகாப்பான, சமச்சீரான உணவு குறித்த 2020 விதிமுறைகளைச் செயல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆறு வாரங்களுக்குள் மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், மதிய உணவு மற்றும் பிற ஊட்டச்சத்துத் திட்டங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

மத்தியக் கல்விச் செயலாளர், ராஜஸ்தான் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு குறிப்பு அனுப்பிய நீதிமன்றம், எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நீதிபதிபள்ளிஉணவுதடை