டெல்லி விளையாட்டு வளாகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் புட்டிகளுக்குத் தடை

டெல்லி விளையாட்டு வளாகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் புட்டிகளுக்குத் தடை

படம்: என்டிடிவி

05 Oct 2026 - 1:39 pm

1 mins read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வளாகங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் புட்டிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூய்மையை வலியுறுத்தி செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒருமாத கால ‘ஸ்வச்சதா ஹி சேவா’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளையாட்டுத் திடல்கள், அவற்றின் சுற்றுப் பகுதிகளில் நெகிழிக் கழிவுகள் சேர்வதைத் தடுக்கும் வகையில், குடிநீர் விநியோக இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கும் கழிவுகள், மக்கா கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து சேகரிப்பதற்காக பச்சை, நீல நிற இரட்டை நெகிழிக் தொட்டிகள், எஃகு குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. இதுவரை விளையாட்டு வளாகங்களிலிருந்து மட்டும் ஏறக்குறைய 2.5 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.

நகரின் முக்கியமான விளையாட்டு மையங்கள், கோல்ஃப் திடல் ஆகியவற்றில் இந்தத் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லி துணைநிலை ஆளுநரும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவருமான தரன்ஜித் சிங் சாந்துவின் வழிகாட்டுதலின்கீழ் இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், சில சிறப்புத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 75 குடியிருப்பு நலச் சங்கங்கள், ஏராளமான மாணவர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்