பெங்களூர்: பெங்களூர் நகரில் ஐடி வேலையில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தங்கள் தனிமையைப் போக்க காலையில் ஐடி வேலை, மாலையில் டாக்சி ஓட்டுநர்களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.
பெங்களூரில் இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று புகழப்படும் அளவிற்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தால் கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என்ற கனவுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் பெங்களூருக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் தனது வார இறுதி நாட்களில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவதாக பகிர்ந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி பல்வேறு ஐடி நிறுவன ஊழியர்கள் டாக்சி ஓட்டும் நபர்களாக இருக்கின்றனர். சிலர் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களையே பகுதி நேர ஓட்டுநர்களாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர் என்கிறார்.
இதுபற்றி விசாரிக்கையில் பலரும் தங்களது தனிமையை போக்கிக்கொள்ள இப்படியான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக்கூறுகின்றனர். சில பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
கூடுதல் பணம் வருவது தங்களுக்கு முக்கியமில்லை. இதுபோல் வேலை செய்வதால் புதிய நபர்களை சந்திப்பதுடன் அவர்களுடன் பழகுவது போன்ற விஷயங்களுக்காக இப்படியான வேலைகளில் ஈடுபடுவதாக சிலர் கூறுகின்றனர்.
இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி பலரும் இதுபோன்று செயல்படுவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.